கூகுள் குட்டப்பா - திரை விமர்சனம்:- தமிழ் பிரதியாக ரசிக்க வைக்கிறதா?
கோவை மாவட்டத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழ்ந்து வருகிறார் தர்ஷன். இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன்.
மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார்.
பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தந்தையாக நடித்திருக்கும் கேஎஸ் ரவிக்குமார், முழு கதையும் தன் தோளில் தாங்கி நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகனாக நடித்திருக்கும் தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி பெரியதாக எடுபடவில்லை.
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவருடன் ரோபோ காம்பினேஷன் காட்சிகள் படத்திற்கு ஆறுதலாக உள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். கதையை நேராக சொல்லாமல் கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி காண்பித்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். அர்வியின் ஒளிப்பதிவு சிறப்பு.
கூகுள் குட்டப்பா - பரவாயில்லை
0 Comments