#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தமிழ் சினிமாவில் வெளிவந்த குடும்ப பிரச்சனை படங்கள்

தமிழ் சினிமாவில் வெளிவந்த குடும்ப பிரச்சனை படங்கள்

இன்றைய காலகட்டத்தில் சீரியல்களின் ஆதிக்கம் காரணமாக அதிகமாக குடும்ப படங்கள் வருவதில்லை. பெரிய நடிகர்கள் நடித்த கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் தவிர பெரிதாக குடும்ப படங்கள் வருவதில்லை. ஆனால் ஒரு காலத்தில் சின்ன பட்ஜெட் படங்களாக அதே நேரத்தில் தரமான, குடும்ப நபர்கள் அனைவரும் சென்று பார்க்கும் படமாக வெளிவந்து கொண்டிருந்தது அது ஒரு பொற்காலம். சரி அந்த வகை குடும்ப பிரச்னைகளைப்பற்றி பேசிய படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

குடும்பம் ஒரு கதம்பம் 

1980 ஆம் ஆண்டு விசுவின் கதையில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் விசு, பிரதாப் போத்தன், எஸ். வி  சேகர், கௌண்டமணி, நித்யா,  கமலா காமேஷ், சுமலதா, சாமிக்கண்ணு என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் குடும்பம் ஒரு கதம்பம்.

இந்த படத்தில் நிறைய கிளைக்கதைகளை பேசியிருப்பார்கள். எஸ் வி சேகர் குடும்பத்தை பொறுத்தவரை, மனைவியை வேலைக்கு அனுப்புவதை அவமானமாக கருதும் கணவாக நடித்திருப்பார். எஸ் வி சேகரின் மனைவியான சுகாசினிக்கு வேலைக்கு சென்று கணவனுக்கு உதவலாம் என்று தோன்றும். அதற்கு எதிர் புள்ளியாக பிரதாப் போத்தன் குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்வார்கள் ஆனால் குழந்தையுடன் நேரம் செலவிட முடியாத சூழல் இருக்கும். இதை சற்று குத்தலாக பிரதாப் போத்தனின் அப்பா சொல்லி காட்டுவார். அதே நேரத்தில் பிரதாப் போத்தன் மனைவி இல்லத்தரசியாக வீட்டில் கவனம் செலுத்த ஆசைப்படுவார்.   

இப்படி ஒரு புறம் இருக்க... விசு குடும்பத்தில் விசுவின் மனைவி வேலைக்குச்செல்ல, இவர் திண்ணையில் உட்கார்ந்து ஊர் வம்பு பேசிக்கொண்டிருப்பார். விசுவின் மகன் தனக்கு பிடித்த நடிகர் என சொல்லி கொண்டு சினிமாபைத்தியமாக பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பார். விசுவின் மகள் நித்யா, எஸ். வி சேகரின் மச்சானை ஒருதலையாக காதலிப்பார். 

இது போக வீட்டு திண்ணையில் குடிவரும் ஒருவர் தன் மனைவியிடம் கடித வழியிலேயே குடும்பம் நடத்திக்கொண்டிருப்பார். இப்படி நடுத்தர குடும்பத்தின் பிரச்சனைகளை பற்றி பேசிய இந்த படம், பிரச்சார தொனி இல்லாமல் ரசிக்கும்படி அமைந்திருந்தது. 

சம்சாரம் அது மின்சாரம் 

1986 ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில், விசு, கமலா காமேஷ், லட்சுமி, ரகுவரன், இளவரசி, மனோரமா, கிஷ்மு, சந்திரசேகர், டெல்லி கணேஷ், திலிப் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். 

இந்த படத்தில் அன்றாடம் வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளை இயல்பாக பேசியிருப்பார்கள். முக்கியமாக வீட்டு செலவுகள், அது சார்ந்த புரிதல் இல்லாத மகன் என ரகுவரன் கதாபாத்திரத்தை அமைத்திருப்பார்கள். 

குடும்பத்திற்கு இயைந்து கொடுக்கும் பொறுப்புள்ள மகனாக சந்திரசேகர் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். புதிதாக திருமணம் ஆன புது பெண்ணின் எதிர்பார்ப்புகளை சமரசமின்றி சந்திரசேகர் மனைவி மூலம் சொல்லியிருப்பார்கள். அதே நேரத்தில் திருமணம் என்பது உடல் சார்ந்த உறவு மட்டும் அல்ல மனம் சார்ந்த உறவு என்பதை இந்த ஜோடி கதாபாத்திரங்கள் மூலம் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லியிருப்பார்கள். 

இந்த படத்தில் 10 ஆம் வகுப்பு பாஸ் பண்ண முயற்சி செய்யும் கதாபாத்திரமாக அந்த கடைசி  மகன் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். அவன் ஒரு சேட்டு பெண்ணை காதலிப்பதாக, கடைசியில் அவன் அந்த காதலில் தோல்வி அடைவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

விசுவுக்கும், ரகுவரனுக்குமான அந்த ஈகோ புள்ளிதான் படத்தின் மொத திரைக்கதையையும் நகர்த்தும்.  

அப்பாவுக்கும் மகனுக்குமான சண்டையில் தானும் தன் குழந்தையும் ஒதுக்கப்பட்டது குறித்து லட்சுமி கவலை கொள்ளும் அந்த இறுதி காட்சி அனைவரையும் நெகிழ வைக்கும் காட்சி. மேலும் அந்த காலகட்டத்திலேயே தனிக்குடித்தனம் பற்றி பேசியது ஆச்சர்யமளிக்கும் ஒன்று. 

பெண்மணி அவள் கண்மணி

1986 ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில், விசு, சீதா,  பிரதாப் போத்தன், குட்டி பத்மினி, டெல்லி கணேஷ், மனோரமா, கிஷ்மு, வடிவுக்கரசி, எம் என் ராஜம், ரமேஷ் அரவிந்த், அருணா, சேது விநாயகம், இளவரசன் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் பெண்மணி அவள் கண்மணி. 

இந்த படத்திலும் நிறைய கிளைக்கதைகள் இருக்கும். துளியும் சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கும் அதுதான் விசு படங்களின் சிறப்பு.

விசுவால் அக்கம் பக்கத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்காமல் இருக்க முடியாது. அந்த காரணத்திற்காகவே இந்த ஏரியாவிற்கு வீடு மாற்றி  வந்திருப்பார்கள். விசு, பிரதாப் போத்தன், குட்டி பத்மினி குடும்பம். 

கணவனை கைக்குள் போட்டுகொண்டு மாமனார், மாமியாரை தரக்குறைவாக நடத்தும் மருமகள். 

தன் மகனிடம் நெருங்க விடாமல் கொடுமை செய்யும் மாமியார். 

குடிபோதையில் குடும்ப பொறுப்பு இல்லாமல், எந்த நேரமும் குடியில் மிதக்கும் அப்பா+மகன்.

என பிரச்சனைகளுக்கு குறைவில்லாமல் இருக்கும் இந்த படத்தில், விசுவின் அலப்பறை தாங்காமல், முதியோர் இல்லத்தில் விட அங்கு அவர் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்க ஒருகட்டத்தில் அவரை பிரிய மனமில்லாத மகன் அவரை அழைத்து செல்லும் காட்சி சிறப்பு.

அதன் பின் படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனையையும் விசு தீர்க்கும் விதம் அற்புதம். 

வரவு எட்டணா செலவு பத்தணா 

1994 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில் நாசர், ராதிகா, கௌண்டமணி, வினுச்சக்ரவர்த்தி, வடிவேல், கோவை சரளா என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம்  வரவு எட்டணா செலவு பத்தணா.

இந்த படத்தில் வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன்இருக்கும் கணவன், அதே நேரத்தில் நியாமான ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் ஆசைப்படும் மனைவி என கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஊரை ஏய்த்து பிழைக்கும் அரசியல்வாதி.

சாராயக்கடை நடத்தி மனசாட்சி இல்லாமல் சம்பாரிக்கும் அரசியல் பிரமுகர். 

என பல கதாபாத்திரங்கள் மூலம் இயல்பான வாழ்க்கை நமக்குள் கடத்தப்பட்டிருக்கும்.

காலம் மாறி  போச்சு 

1996 ஆம் ஆண்டு வினுச்சக்ரவர்த்தி, வடிவுக்கரசி, பாண்டியராஜன், சங்கீதா, சுந்தர்ராஜன், ரேகா, வடிவேல், கோவை சரளா என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் காலம் மாறி போச்சு.

இந்த படத்தில் வினுச்சக்ரவர்த்தி, தன் மகனை மட்டும் படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பார். தன் மகள்களுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்கை வாழும் வசதியற்ற நபர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பார்.

ஒரு கட்டத்தில் அந்த மகன் சுயநல வாழ்க்கையை தேர்ந்தெடுத்து, அப்பாவை மதிக்காமல் சொத்துக்களை அபகரித்துக்கொள்ள ஆசைப்பட்டு, வினுச்சக்ரவர்த்தியை வீட்டை விட்டு அனுப்ப அதன் பின் என்ன நடந்தது என்பது கதையாக இருக்கும்.

இந்த படத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்காமல், மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பான்மை அப்பாக்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கும்.

மாமனார் வீட்டில் வரதட்சணை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொறுப்பற்ற மாப்பிள்ளைகளையும் கண்டித்து இருப்பார்கள்.

மிக முக்கியமாக அந்த பெண்களின் அண்ணனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அனைவரும் தங்கள் மச்சானை தொடர்புபடுத்திக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.


விரலுக்கேத்த வீக்கம்

1999 ஆம் ஆண்டு வி சேகர், இயக்கத்தில் தேவா இசையில், லிவிங்ஸ்டன், குஷ்பூ, விவேக், கனகா,  வடிவேல், கோவைசரளா, நாசர், ஊர்வசி, ஜெய் கணேஷ், தியாகு, குமரிமுத்து, சூர்யகாந்த் என பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் விரலுக்கேத்த வீக்கம். 

இந்த படத்தின் கதைப்படி வரவுக்கு மீறிய செல்வது செய்யும் கணவர்கள். 

அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக கணவருக்கு உதவும் நோக்கில் வேலைக்கு செல்லும் மனைவிகள். 

மனைவிகள் வேலைக்கு செல்வதை கௌரவ குறைச்சலாக நினைத்து அறவே வெறுக்கும் கணவன்மார்கள். இதனால் இவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தங்கள் இதுதான் கதையாக இருக்கும்.

ஒற்றுமையாக  வாழும் நாசர், ஊர்வசி தம்பதிகள். என எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக உருவாக்கியிருப்பர் இயக்குனர் வி சேகர். ரசிக்கும்படி இருக்கும்.


வீட்டோட மாப்பிள்ளை

2001 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில், தேவா இசையில், நெப்போலியன், ரோஜா, விஜயகுமார், வையாபுரி, சார்லி, கோவை சரளா, கல்பனா, தலைவாசல் விஜய் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் வீட்டோட மாப்பிள்ளை. 

இந்த படத்தின் கதைப்படி , ஹோட்டல் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கும் விஜயகுமார் பொறுப்பற்ற தன் மகனாலும், மருமகன்களுடனும் குப்பை கொட்டி கொண்டிருக்க, தன்  மூன்றாவது மகளுக்கு திருமணமாகி வரும் மாப்பிள்ளையின் பொறுப்புள்ள நடத்தை காரணமாக அந்த குடும்பம் உயர்வு பெறுவதை காட்சி படுத்தியிருப்பார்கள். அதன் பின் விஜயகுமாருடைய ஓடிப்போன மகன் வர அடுத்து என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

2000 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில், தேவா இசையில், நாசர், குஷ்பூ, விஜயகுமார், கரண், வடிவேல், விவேக், கோவை சரளா என பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இந்த படத்தின் கதைப்படி தன் கடைசி தம்பியை சிறு வயதிலிருந்து படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தும் அண்ணன் மற்றும் அண்ணியை அந்த கடைசி தம்பி நல்ல நிலைக்கு வந்தவுடன் தன கடமையை மறந்து சுய நலமாக செயல்படும் பொழுது அடுத்து என்ன என்பதுதான்  கதை.   

அனைத்து வீடுகளிலும் நடக்கும் இது போன்ற இயல்பான சம்பவங்கள். படம் பார்க்கும் அனைவரும் அந்த சம்பவத்தில் எளிதாக தன் வாழ்க்கையை பொருத்தி பார்க்கும் கண்ணாடியாக இந்த படங்கள் இருக்கும். 

Post a Comment

0 Comments