தமிழில் வெளிவந்த வித்தியாசமான ரசிக்க வைத்த பேய் படங்கள்
பேய் படங்கள் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆதி காலம் முதலே வந்து கொண்டுதான் இருக்கிறது. அதே நேரத்தில் 90-களில் பேய் படங்கள் வருவது வெகுவாக குறைந்திருந்தது.
அது மட்டும் இல்லாமல் வழக்கமான டெம்ப்லேட் உடன் அதாவது இருட்டு, வெள்ளை சீலை, வேப்ப மரம் என்ற புளித்த மாவை கீழே ஊற்றி விட்டு முழுக்க ஃபிரெஷ் ஆன கதையாக வர தொடங்கியது 2000களில். சரி அப்படிப்பட்ட வித்தியாசமான பேய் படங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
சந்திரமுகி
ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த பாபா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அப்செட்டான ரஜினி, அடுத்து என்ன பண்ணலாம் என்ற யோசனையில் இருந்த பொழுது அரசியல் படங்கள் செய்ய போட்ட திட்டங்கள் பெரிதாக செட்டாகாத நிலையில் கன்னடத்தில் பார்த்த ஆப்தமித்ரா படம் வித்தியாசமாக இருந்தது.
இது பல வருடங்களுக்கு முன் மோகன்லால், சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் வெளிவந்த மணிசித்ரதாழு திரைப்படம்தான். சரி நாம் எடுத்த சாமி படம்தான் ஓடவில்லை பேய் படம் எடுத்து பார்ப்போம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து இருப்பார் போல. காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத ஆச்சர்யமாக படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
முனி
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த பேய் படங்களை படங்களை பொறுத்தவரை சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு உயிரிழந்த ஆத்மா, அந்த வீட்டு நபர்களை பயமுறுத்தும். அதன் பின் இவரின் உதவியுடன் அதன் எதிரிகளை பழி தீர்ப்பதாக காட்சிப்படுத்தியிருப்பார். அடுத்தடுத்த பார்ட்களை பொறுத்தவரை கதை திரைக்கதையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், காட்சிகளில் மாற்றங்கள் செய்து சுவாரஸ்யமாக கதை நகருவது போல எடுத்திருப்பார். இவர் உருவாக்கிய பேய்களுக்கு உதவும் நாயகன் என்ற கான்செப்ட் வித்தியாசமானது.
2007 ஆம் ஆண்டு நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து ராஜ்கிரண், கோவைசரளா, வினுசக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் முனி. சந்திரமுகி பட ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு நல்ல வெற்றியை சந்தித்தது.
இந்த படத்தின் கதைப்படி அரசியல்வாதியான காதல் தண்டபாணி, தன் தொண்டனை நம்ப வைத்து, ஏமாற்றி, வீண் பழி சுமத்தி சூழ்ச்சி செய்து கொன்றும் விடுகிறார். அதன் பின் அந்த தொண்டனான ராஜ்கிரண், பேயாக வந்து ராகவா லாரன்ஸின் உதவியுடன் எப்படி பழி தீர்த்தார் என்பதுதான் கதை.
அதன் பின் 2011 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமாக காஞ்சனா என்ற படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, தேவதர்ஷினி, ஸ்ரீமன், கோவை சரளா மற்றும் பலர் நடிக்க இந்த படம் வசூலில் சாதனை புரிந்து காஞ்சனா என்ற பிராண்டை கிரியேட் செய்து விட்டது.
இந்த படத்தின் கதைப்படி திருநங்கையான காஞ்சனா, தான் வளர்த்த திருநங்கை பெண்ணை படிக்க வைக்கிறார். கடினமாக உழைத்து நிலம் ஒன்றை வாங்கி போடுகிறார். அந்த நிலத்தை கையக படுத்த ஆசைப்படும் அரசியல்வாதி. காஞ்சனா அசந்த நேரம் அவரை கொலை செய்து விட்டு அந்த நிலத்தை கைப்பற்றுகிறார். அதன் பின் அந்த காஞ்சனா ராகவா லாரன்ஸின் உதவியால் அந்த அரசியல்வாதியை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் கதை.
அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டு இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்ஸி, கோவை சரளா, ஸ்ரீமன், ஜாங்கிரி மதுமிதா, மனோபாலா மற்றும் பலர் நடிக்க காஞ்சனா 2 என்ற படம் வெளிவந்தது.
இந்த படத்தின் கதைப்படி மொட்டை சிவாவும், கங்காவும் எதிரிகள் சூழ்ச்சியால் கொல்லப்பட, அவர்களுக்கு உதவியவர்களும் கொல்லப்பட அடுத்து என்ன என்பது தான் கதையாக இருக்கும்.
2019 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி, ரி டிஜாவி அலெக்ஸாண்ட்ரா, தேவதர்ஷினி, ஸ்ரீமன், கோவை சரளா, சூரி என பலர் நடிக்க வெளி வந்த காஞ்சனா 3 என்ற படமும் வசூல் மழையை பெய்தது. இதன் பின் இயல்பாக பேய் பட ட்ரெண்ட் உருவானது.
இந்த படத்தின் கதைப்படி ஆதரவற்ற இல்லம் நடத்தும் ராகவா லாரன்ஸ், அங்கு வரும் வில்லன் கும்பலால் அவர்கள் கொடுக்கும் கணக்கு காட்டப்படாத கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுக்குமாறு மிரட்டபடுகிறார். அதற்கு மறுத்து அவர்களை திட்டி அனுப்பும் ராகவா லாரன்ஸையும் அவரது காதலியையும் சூழ்ச்சியால் விபத்து ஏற்படுத்தி கொல்கிறார்கள். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் கதை.
பிசாசு
2014 ஆம் ஆண்டு அரோல் கொரோலி இசையில், மிஸ்கின் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க வெளிவந்த திரைப்படம் பிசாசு. தொடர் தோல்விகளில் இருந்த மிஷ்கினுக்கு இந்த படம் நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது.
கதாநாயகனால் விபத்தில் உயிரிழக்கும் அந்த பெண் அந்த நிமிடத்தில் கொள்ளும் காதலால் பேயாக வந்து அவனுக்கு உதவுவாள். அதுவரை நாம் பேய் படங்களை காமெடி கலந்த திகில் படமாக பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில், இந்த படம் முழுக்க வித்தியாசமான படமாக அமைந்தது.
இந்த படத்தில் பேய் வரும் காட்சிகள் தேவதை வரும் காட்சிகளாக நமக்கு தெரிந்தது. ராதாரவியின் நடிப்பும் அபாரம். நல்ல முயற்சி.
தில்லுக்கு துட்டு
2016 ஆம் ஆண்டு "லொள்ளு சபா" ராம் பாலா இயக்கத்தில் சந்தானம், கருணாஸ், ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு சறுக்கலாக சந்தித்து கொண்டிருந்த சந்தானத்துக்கு அவர் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்த லொள்ளு சபா நிகழ்ச்சி இயக்குனரே இந்த படத்தை இயக்கிக்கொடுத்திருப்பார்.
இந்த படத்தின் கதைப்படி பணக்காரரான கதாநாயகியின் அப்பா சந்தானத்துக்கு பெண் கொடுக்க விருப்பமில்லாமல் அவரை குடும்பத்தோடு கொல்ல திட்டமிட்டு ஊரு வெளியே இருக்கும் பங்களாவிற்கு அவரை குடும்பத்தோடு வர சொல்லுவார். தன் அடியாட்களை வைத்து கொலை செய்து விட்டு பேய் அடித்து கொன்றதாக கதை கட்டி விடலாம் என்பது அவரது பிளானாக இருக்கும். ஆனால் அந்த பங்களாவில் உண்மையாகவே பேய் இருக்க அங்கு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பார்கள்.
காமெடி, சீரியஸ் என்று இல்லாமல் பேயை பங்கமாக கலாய்த்து தள்ளியிருப்பார்கள். ஒவ்வொரு காட்சியும் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.
2019 ஆம் ஆண்டு சந்தானம், ஸ்ரீதா சிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, பிபின், சிவசங்கர், ராமர், கார்த்திக் ஸ்ரீனிவாசன் என பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2.
இந்த படத்தின் கதைப்படி சந்தானமும், மொட்டை ராஜேந்திரனும் கொடுக்கும் அலப்பறை தாங்காமல் அந்த பகுதியில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் திட்டம் போட்டு பேயிடம் மாட்டி விடுகிறார்கள்.
சந்தானம் காதலிக்கும் பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்தால் அந்த பேய் கொன்று விடும் அபாயம் இருக்கும் சூழலில், அந்த பிரச்சனையை எப்படி தீர்த்தார்கள். அவர்கள் காதல் வென்றதா என்பதை விறு விறு திரைக்கதையில் சிரிப்பு மழையுடன் சொல்லியிருப்பார்கள்.
டிமான்ட்டி காலனி
2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, ஜாங்கிரி மதுமிதா என பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டிமான்ட்டி காலனி.
வெள்ளக்கார துரை ஒருவன் அவன் மனைவிக்கு நிகழும் சம்பவத்தால் தன் பணியாட்களை ஒவ்வொருவராக கொன்று இறுதியில். அவன் அந்த வீட்டையே கொளுத்திக்கொள்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். நிகழ் காலத்தில் இந்த கதையை தெரிந்தும் அசட்டு துணிச்சலோடு அங்கு செல்லும் கதாநாயகன் உட்பட நண்பர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதை.
வழக்கமான பேய் படங்களில் எதேச்சையாக பேய் இருக்கும் பங்களாவில் போய் அப்பாவிகள் சிக்கி கொள்வதாக கதை அமைப்பட்டிருக்கும். இந்த படத்தில் பேய் இருக்கும் இடத்தை தேடி கதாநாயகன், நண்பர்கள் உட்பட செல்வார்கள்.
செம திரில்லர் மற்றும் சீரியஸ் படமாக அல்லு விட்டிருக்கும் இந்த டிமான்ட்டி காலனி. ஒருவர் கூட உயிருடன் திரும்ப முடியாது அந்த பங்களாவுக்கு சென்று. செம திரில்லர் திரைப்படம் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
0 Comments