ரஜினிகாந்தின் பாட்ஷா பட கதையில் வெளிவந்த தமிழ் படங்கள்
ஒரு படம் வெற்றிபெறும் பொழுது கிட்டத்தட்ட அதே டெம்ப்லேட்டில் அடுத்த படங்கள் வருவது இயல்பு. அது கமர்சியல் படமாக இருக்கலாம் அல்லது ஆர்ட் படங்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு பருத்திவீரன் படம் வெளிவந்த பிறகு ஒரே கிராமப்புறம் சார்ந்த எதார்த்த சினிமாக்கள் வந்தது. சந்திரமுகி, முனி, காஞ்சனா படங்களுக்கு பிறகு பேய் படங்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. சரி இது ட்ரெண்ட் சம்பந்தப்பட்ட விஷயம். இன்று நாம் அலசப்போகும் விஷயம் என்னவென்றால் வெற்றி பெற்ற ஒரு படத்தின் கதையை அப்படியே எடுத்து பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் படம் எடுத்திருப்பார்கள். அந்த படத்தின் காப்பி போலவே அமைந்திருக்கும் இவர்கள் எடுத்திருக்கும் படம். அது போன்ற படங்களைப்பற்றி பார்ப்போம்.
பாட்ஷா
1995-ல் வெளிவந்த இந்த படம் ரஜினியின் படங்களில் தாறுமாறு ஹிட் என்பது எல்லோருக்கும் தெரியும். ரஜினி, நக்மா, ரகுவரன் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் ஒன் டைம் மேஜிக் படமாக உள்ளது. சரி இந்த படத்தின் காப்பி அல்லது இன்ஸ்பரேஷன் செய்து வெளிவந்த படங்களை பற்றி பார்ப்போம்.
சீதனம்
1995-ல் இயக்குனர் ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில், தேவா இசையில் வெளிவந்த திரைப்படம் சீதனம். பிரபு, சங்கீதா, ரஞ்சிதா, மன்சூர் அலிகான் என பலர் நடித்த இந்தப்படம் பாட்ஷா சாயலில் இருக்கும். வித்தியாசம் என்னவென்றால் இந்த படத்தில் படத்தின் நாயகனான பிரபுவே ரஞ்சிதாவிடம் தன் முன்கதையை சொல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் தன் முன்கதையை நினைத்துப்பார்ப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஜனா
2004-ல் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், தினா இசையில் அஜித், ஸ்னேகா நடித்து வெளி வந்த திரைப்படம் ஜனா. இந்த படத்தில் திரைக்கதையிலும் சுவாரஸ்யத்துக்காக கூட ஒரு சில மாற்றங்கள் செய்யாமல் எடுத்திருப்பார்கள். அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த அஜித்தின் சுமாரான படங்களில் ஒன்றாக இந்த படமும் அமைந்தது. இந்த படம் பாட்ஷா படத்தின் அப்பட்டமான காப்பியாக அதே நேரத்தில் சுவாரஸ்யமில்லாமல் எடுத்திருப்பது அப்படியே தெரியும்.
ஏய்
2004-ல் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார், கலாபவன்மணி, நமீதா, வடிவேல் நடித்து வெளிவந்த திரைப்படம் ஏய். இந்த படம் பாட்ஷா படத்தைத்தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், வடிவேலு - சரத்குமார் கூட்டணியின் காமெடி, முன் பாதி விறுவிறுப்பான திரைக்கதை, இடைவேளை சண்டைக்காட்சி என நிறைய மெனக்கெட்டிருப்பார்கள். இந்த படமும் பாட்ஷா பட சாயலில்தான் இருக்கும். அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் எடுத்திருப்பார்கள்.
கஜேந்திரா
2004-ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையில், விஜயகாந்த், லயா, சரத்பாபு, ராதாரவி, சீதா, ராஜிவ், ரமேஸ்கண்ணா, எம் எஸ் பாஸ்கர் என பல நட்சத்திரங்கள் நடித்து வெளி வந்த திரைப்படம் கஜேந்திரா. இது பாகுபலி புகழ் இயக்குனர் தெலுங்கில் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படமாகும். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். இந்த படம் பாட்ஷா படத்தின் அப்பட்டமான காப்பியாக மட்டுமில்லாமல், தமிழில் பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த தெலுங்கு ரீமேக் படத்தையும் விஜயகாந்தை வைத்து இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வருபம்
2013-ல் கமல்ஹாசன், பூஜாகுமார் மற்றும் பலர் நடித்து கமல்ஹாசனே இயக்கி வெளி வந்த திரைப்படம் விஸ்வரூபம். பல தடைகளைத்தாண்டி வெளிவந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தைப் பொறுத்தவரை இந்த பட கதையில் கமல் எழுதிய ஜிகாதிகள் கதை கொஞ்சமும், அஜித் நடித்த வரலாறு படத்திலிருந்து கொஞ்சமும், பாட்ஷா படத்திலிருந்து கதையும், அந்த இடைவேளைக்காட்சியும் கலந்து எடுத்திருப்பார் கமல்ஹாசன். ஆக பாட்ஷா படத்தை போன்ற சாயலில் இருந்தாலும் கமல் படத்துக்கான மேக்கிங்கும் இருக்கும்.
வேதாளம்
2015-ல் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேதாளம். மேற்கண்ட திரைப்படங்கள் பாட்ஷா திரைப்படத்திலிருந்து எடுத்திருப்பார்கள். இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பாட்ஷா பட சாயலில் எடுக்கப்பட்ட ஏய் படத்தை அப்படியே அஜித்திற்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்கள் செய்து எடுத்திருப்பார்கள்.
0 Comments