இருவேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்த நட்சத்திரங்கள்
ஒரு நடிகர் என்பவர் அனைத்து கதாபாத்திரங்களையும் திறம்பட செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். ஆனால் தமிழ் சினிமா பெரும்பாலும் வியாபார நோக்கத்தோடு செயல்படுவதால் இது போன்ற இயல்பான கதாபாத்திரங்களில் நாம் நம் முன்னணி நடிகர்களை காண முடிவதில்லை. மேலும் வளரும் நடிகர்களும் தன் வியாபார அந்தஸ்து உயர்ந்த பின் வழக்கமாக அனைவரும் செய்யும் ஒரே மாதிரியான கதாநாயக பிம்பத்துக்குள் தொலைந்து போய் விடுகிறார்கள். சரி இந்த பிம்பத்தை உடைத்த, ஒரே கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொள்ளாத இரு வேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்த நட்சத்திரங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த வரிசையில் முதலில் நடிகர் ரகுவரனை பற்றி பார்க்கலாம். ரகுவரன் இயல்பாகவே தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப நிஜ வாழ்க்கையிலும் வலம் வருவாராம் ஆச்சர்யமான விஷயம் இது! உதாரணத்திற்கு அஞ்சலி போன்ற படத்தில் நடிக்கும் பொழுது மென்மையான நபராகவும் மனிதன் போன்ற படங்களில் நடிக்கும் பொழுது கரடு முரடான நபராகவும் காணப்படுவாராம்! சரி இவர் நடித்த எதிர்மறை மற்றும் நேர்மறை கதாபாத்திரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
எதிர்மறை கதாபாத்திரங்கள்
* 1987 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த மனிதன் திரைப்படத்தில் கொடூரமான வில்லனாக அசத்தியிருப்பார். இதில் மனைவியை கொடுமை செய்யும் நபராக நடித்திருப்பார்.
* 1990 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த புரியாத புதிர் திரைப்படத்தில் சைக்கோ வில்லனாக வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். இன்று வரை அந்த " ஐ நவ் " வசனம் பிரபலம்.
* 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தில் ரஜினிக்கு எதிரான மும்பை டான் மார்க் ஆன்டனியாக வருவார். மைண்ட் கேம் நடிப்பில் அசத்தியிருப்பார். “உன்ன மன்னிச்சு விட்றதுக்கு நான் பாட்ஷா இல்லடா ஆன்டனி” அடி தூள் வசனம் அது.
* 1986 ஆம் ஆண்டு வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடுத்தர வர்க்கத்து சுயநலமிக்க மகனாகவும், ஒவ்வொன்றையும் கணக்கு பார்க்கும் கணவனாகவும் வருவார்.
* 1999 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் படத்தில் முதல்வராக வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். கடைசி வரை நாயகனிடம் அடி வாங்காமல் அசரடித்திருப்பார்.
* 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் "யானை பசிக்கு சோள பொறி" என்று சொல்வார்கள். அவ்வளவு சின்ன கதாபாத்திரம்தான் ஆனால் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருப்பார்.
* 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படத்தில் தன் நண்பனை பழிவாங்க வஞ்சத்தோடு திரியும் கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பார்.
* 2000 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த உயிரிலே கலந்தது திரைப்படத்தில், தனக்கு கிடைக்கும் தாய், தந்தையரின் பாசம் தம்பி சூர்யாவுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது பிடிக்காத ரகுவரன் ஏக்கம் கலந்த பொறாமையுடன் தம்பியை கொலை செய்ய முயற்சி செய்பவராக நடித்திருப்பார்.
நேர்மறை கதாபாத்திரங்கள்
* 1990 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படத்தில் பாசமிகு அப்பாவாக வாழ்ந்திருப்பார்.
* 1995 ஆம் ஆண்டு இயக்குனர் அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாசிணுங்கி படத்தில். மனைவி மீது "பொஸசிவ்" கொண்ட கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அந்த படத்தின் கதாநாயகனே இவர்தான். அது ஏனோ வெளிப்படவில்லை.
* 1997 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த ஆஹா திரைப்படத்தில் பாசமிகு அண்ணனாக, சாகப்போகும் தன் காதலியை ரகசியமாக சந்திக்கும் காதலனாக பாத்திரத்திற்கு நியாயம் செய்திருப்பார்.
* 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளி வந்த ரன் படத்தில் பாசமிகு மச்சானாக நடித்திருப்பார். மாமன் மச்சான் உறவு என்பது எதார்த்த வாழ்க்கையில் சற்று சிக்கலானது. யாருக்கும் அந்த உறவு ரசிக்கும்படி அமைவதில்லை. அந்த எதார்த்தம் ரகுவரன் நடிப்பில் இயல்பாக வெளிப்படும்.
* 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருமலை படத்தில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வெளிப் பூச்சுகள் இல்லாத இயல்பான கணவன் மனைவியாக ரகுவரனும் கௌசல்யாவும் நடித்திருப்பார்கள்.
* 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த முகவரி திரைப்படத்தில் தம்பிக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகள் கூறி ஊக்கமளிக்கும் அண்ணனாக வாழ்ந்திருப்பார்.
* 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தில் பாசமிகு அப்பாவாக செமையாக நடித்திருப்பார்.
* 2008 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் யாரடி நீ மோஹினி இந்த படத்தில் தன் மானம் மிக்க அப்பாவாக ரசிக்கும்படி நடித்திருப்பார். ரகுவரன் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இது.
நேர்மறை, எதிர்மறை என எந்த கதாபாத்திரத்தையும் லாவகமாக கையாளும் மகா கலைஞன் ரகுவரன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பிரகாஷ்ராஜ் நடித்த எதிர்மறை மற்றும் நேர்மறை கதாபாத்திரங்கள்
எதிர்மறை கதாபாத்திரங்கள்
1995 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தில் மாமனாருக்கு தன்னை நல்ல மருமகனாக காட்டிக்கொண்டு தன் மனைவியின் தங்கை மீது மோகம் கொள்ளும் மாப்பிள்ளையாக நடித்திருப்பார்.
1996 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளி வந்த கல்கி படத்தில் மனைவியை துன்புறுத்தும் சைக்கோ கணவனாக நடித்திருப்பார்.
2000 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அப்பு திரைப்படத்தில் அப்பாவி பெண்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் தள்ளும் திருநங்கை பாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
1996 ஆம் ஆண்டு களஞ்சியம் இயக்கத்தில் முரளி நடிப்பில் வெளிவந்த பூமணி திரைப்படத்தில் தன் தம்பியின் மனைவியை அடைய விரும்பும் அண்ணனாக நடித்திருப்பார்.
1997 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர் முரளி அப்பாஸ் இயக்கத்தில் அஜித் ரம்பா நடிப்பில் வெளிவந்த ராசி திரைப்படத்தில் நேர்மையான வில்லனாக நடித்திருப்பார்.
2007 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி திரைப்படத்தில் காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருப்பார்.
2010 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படத்தில் ஆள் கடத்தல் கட்ட பஞ்சாயத்து செய்யும் வில்லனாக, சூர்யாவுடன் ஏற்படும் மோதலால் சூர்யாவை தன் ஊருக்கே வரவழைத்து வம்பிழுக்கும் வில்லனாக நடித்திருப்பார்.
2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் காமெடி கலந்த தன் முறைப்பெண் மீது "பொஸசிவ்" கொண்ட வில்லனாக "டாமினேட்" செய்திருப்பார்.
2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி திரைப்படத்தில் தன் தாயை கவனிக்காத பேராசை பிடித்த பொறுப்பில்லாத மகனாக நடித்திருப்பார்.
நேர்மறை கதாபாத்திரங்கள்
1998 ஆம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த சொர்ணமுகி திரைப்படத்தில் ஒரு நடனக்கலைஞரை காதலித்து விட்டு இவர் படும் பாடுகளும், பார்த்திபனால் இவர் அனுபவிக்கும் துன்பங்களும் என நடிப்பில் அசத்தியிருப்பார் மனிதர்.
1998 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் லிவிங்ஸ்டன் நடித்த சொல்லாமலே திரைப்படத்தில் நாக்கை அறுக்க சொல்லும் நாயகனுக்கு போலியான நம்பிக்கை கொடுக்கும் நேர்மையான டாக்டராக நடித்திருப்பார்.
1998ஆம் ஆண்டு மனோஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த குருபார்வை படத்தில் தன்னை ஏமாற்றிய பெண்களை பழிவாங்கும் கதை நாயகனாக நடித்திருப்பார்.
2007 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்த மொழி படத்தில் ப்ரித்விராஜின் நண்பராக இவர் அடிக்கும் லூட்டி இருக்கிறதே பட்டாசு ராகம். அதிலும் அந்த இசைமழையில் நனையும் காட்சி ஆஸம்.
2008 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் திரிஷா நடிப்பில் வெளிவந்த அபியும் நானும் திரைப்படத்தில் பாசக்கார அப்பாவாக வாழ்ந்திருப்பார்.
2003 ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சொக்கத்தங்கம் திரைப்படத்தில் முன் கோபம் கொண்ட ஆனால் நேர்மையான மச்சானாக தூள் கிளப்பியிருப்பார்.
2003 ஆம் ஆண்டு . துரை இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த காதல் சடுகுடு திரைப்படத்தில் தன் பாசக்கார மகளின் காதலனை தவறாக புரிந்து கொள்ளும் தந்தையாக நடித்திருப்பார்.
2008 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் தான் நினைத்ததை அனைவரும் செய்ய வேண்டும் என நினைக்கும் "தான் பிடித்த முயலுக்கு மூணு கால்" என்ற மனநிலை கொண்ட அப்பாவாக தன் அசத்தல் நடிப்பை கொடுத்திருப்பார்.
நாசர் நடித்த எதிர்மறை மற்றும் நேர்மறை கதாபாத்திரங்கள்
எதிர்மறை கதாபாத்திரங்கள்
1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனின் பெரியப்பா மகனாக அதகளம் பண்ணியிருப்பார் நாசர்.
1994 ஆம் ஆண்டு ரேவதி, ஊர்வசி, ரோகினி முதன்மை கதா பாத்திரத்தில் நடித்த மகளிர் மட்டும் மட்டும் திரைப்படத்தில் "ஜொள்ளு" மேனேஜராக அசத்தியிருப்பார்.
1993 ஆம் ஆண்டு சத்யராஜ், கௌதமி நடிப்பில் வெளிவந்த ஏர்போர்ட் திரைப்படத்தில் வில்லனாக அசத்தியிருப்பார். படம் முழுவதும் இவர் வரும் காட்சிகள் பக் பக் என்று இருக்கும்.
1995 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அர்ஜுன் நடித்து வெளிவந்த குருதிபுனல் திரைப்படத்தில் தீவிரவாதியாக வந்து நம்மை பதைபதைக்க வைத்திருப்பார்.
2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரியின் முதல் படமாக, பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படத்தில் ஆஸிஷ் வித்யார்த்திக்கு எதிராக இவரும் ஒரு ரவுடி கும்பல் தலைவனாக இருப்பார். ஒவ்வொரு வசனங்களிலும் திருக்குறளை இணைத்து பேசி நடித்திருப்பார் செமையாக இருக்கும்.
2006 ஆம் ஆண்டு மெட்டி ஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் பரத், கோபிகா நடித்த எம்டன் மகன் திரைப்படத்தில் கண்டிப்பான கோபக்கார அப்பாவாக நடித்து இயல்பு வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருப்பார்.
2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரபு நடிப்பில் வெளி வந்த திரைப்படம் தாமிரபரணி. இதில் நதியாவின் அண்ணனாக வரட்டு கெளரவம் பார்க்கும் கோபக்கார வெள்ளத்துரையாக நடித்திருப்பார்.
2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடித்த பாகுபலி படத்தில் பிங்கலதேவன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். ஒட்டு மொத பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளியாக இவர் இருப்பார்.
2018 ஆம் ஆண்டு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளி வந்த நோட்டா திரைப்படத்தில் சுயநல அரசியல்வாதியாக விநோதன் சுப்பிரமணியம் என்ற பாத்திரத்தில் கலக்கியிருப்பார்.
நேர்மறை கதாபாத்திரங்கள்
1994 ஆம் ஆண்டு வீ சேகர் இயக்கத்தில் வெளி வந்த வரவு எட்டணா செலவு பத்தணா படத்தில் பட்ஜெட் பார்க்கும் பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக நடித்திருப்பார்.
1995 ஆம் ஆண்டு சுகாசினி இயக்கத்தில் அரவிந்தசாமி, அனுஹாசன் நடித்த இந்திரா திரைப்படத்தில் பொறுப்புள்ள ஊர்த்தலைவராக நடித்திருப்பார்.
1996 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெமினி கணேசன், மீனா நடித்த அவ்வை ஷண்முகி திரைப்படத்தில் பாஷா என்ற சமையல்காரராக நடித்திருப்பார். காமெடி சரவெடி பற்ற வைத்திருப்பார்.
1998 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். அப்பாவி தம்பியாக ராதிகாவிடம் வறு படும் கணவனாக, புத்திசாலி நாச்சியப்பனாக என அந்த படத்தையே தாங்கி பிடித்திருப்பார்.
1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, விஜயகுமார் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் ஈகோ காரணமாக நண்பனை பிரிந்து மார்க்கெட் இழந்து கஷ்டப்படும் இசையமைப்பாளராக வாழ்ந்திருப்பார்.
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே நடிப்பில் வெளிவந்த காதலர் தினம் படத்தில் , கதாநாயகியின் அப்பாவாக நாயகனுக்கு இன்ஸ்பிரேஷன் கொடுக்கும் ஒருவராக நாயகனுக்கு உதவி செய்பவராக நடித்திருப்பார். இந்த படத்தில் நாயகன், நாயகி கா ட்சியை விட நாசர் சம்பத்தப்பட்ட காட்சிகள் அதிக சுவாரஸ்யமாக இருக்கும்.
1999 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில் லிவிங்ஸ்டன், வடிவேலு, விவேக், கோவைசரளா என பலர் நடித்து வெளிவந்த விரலுக்கேத்த வீக்கம் படத்தில் ஊர்வசியின் கணவராக ஓய்வு பெற்ற ராணுவ வீரராக பொறுப்புள்ள கணவராக அசத்தியிருப்பார்.
1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் ரகுவரனின் நண்பராக, பொறுப்புள்ள காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார்.
2000 ஆம் ஆண்டு வி சேகர் இயக்கத்தில் கரண், ரோஜா, குஷ்பூ, விவேக் என பலர் நடித்த கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தில் தம்பிக்காக நஷ்டப்படும் அப்பாவி அண்ணனாக நடித்திருப்பார்.
2005 ஆம் ஆண்டு பூபதிபாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார் நடிப்பில் வெளிவந்த தேவதையை கண்டேன் படத்தில் நேர்மையான வக்கீலாக நடித்திருப்பார்.
2003 ஆம் ஆண்டு ஆர் கண்ணன் இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி நடித்த சேட்டை படத்தில் கேங்ஸ்டர் ஆக வருவார். பிளாக் காமெடியில் அசத்தியிருப்பார்.
2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா நடித்த வீரம் திரைப்படத்தில் தமன்னாவின் அப்பாவாக நல்லசிவம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த ஊருக்காக மட்டுமல்லாமல் பக்கத்துக்கு ஊருக்காகவும் நல்லது செய்யபோய் பகையை சம்பாதித்து கொள்வார்.
2016 ஆம் ஆண்டு மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளி வந்த இறுதிச்சுற்று திரைப்படத்தில் பஞ்ச் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
பசுபதி நடித்த எதிர்மறை மற்றும் நேர்மறை கதாபாத்திரங்கள்
எதிர்மறை கதாபாத்திரங்கள்
2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் கமல்ஹாசன், அபிராமி, நெப்போலியன் என பலர் நடித்து வெளிவந்த விருமாண்டி திரைப்படத்தில் கமலின் நண்பராக பின், அவருடைய பரம எதிரியாக மாறும் கொத்தாளத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2004 ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் தனுஷ், சிந்து துலானி, ஈஸ்வரி ராவ், மணிவண்ணன் என பலர் நடித்து வெளிவந்த சுள்ளான் திரைப்படத்தில் சூரி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார்.
2004 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, வடிவேல், சுஜாதா, வினு சக்கரவர்த்தி என பலர் நடித்த அருள் திரைப்படத்தில் எம்.எல்.ஏ கஜபதியாக மிரட்டல் நடிப்பை கொடுத்திருப்பார்.
2003 ஆம் ஆண்டு தாரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென், விவேக், சாயாஜி ஷிண்டே, மனோஜ் கே ஜெயன், சகுந்தலா, பறவை முனியம்மா, சிட்டி பாபு என பலர் நடித்து வெளிவந்த தூள் திரைப்படத்தில் சொர்ணாக்காவின் தம்பி ஆதியாக வந்து அதகளம் பண்ணுவார்.
2017 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் சசிக்குமார், மஹிமா நம்பியார், சனுஷா என பலர் நடித்து வெளிவந்த கொடிவீரன் திரைப்படத்தில் வில்லங்கம் வெள்ளைக்காரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் வெளுத்திருப்பார்.
2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, மல்லிகா என பலர் நடித்து வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் பட்டாசு பாலு என்ற கதாபாத்திரத்தில் செமையாக நடித்திருப்பார்.
2004 ஆம் ஆண்டு ரமணா மாதேஷ் இயக்கத்தில் விஜய், தேஜாஸ்ரீ ,சோனியா அகர்வால் வடிவேல் சீதா என பலர் நடித்து வெளி வந்த திரைப்படம் மதுர. இந்த திரைப்படத்தில் கே டி ஆர் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் விளையாடியிருப்பார் பசுபதி.
2004 ஆம் ஆண்டு கே எஸ் வசந்தகுமார் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ராம்குமார், சுபா பூஞ்சா நடிப்பில் வெளிவந்த மச்சி திரைப்படத்தில் "சைக்கோ டைப்" வில்லனாக அசத்தியிருப்பார்.
2021 ஆம் ஆண்டு(தற்போது) வெளிவந்த நவம்பர் ஸ்டோரி’ஸ் எனும் வெப் சீரியஸ் இல் யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை இயேசு என்ற கதாபாத்திரத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் வெளுத்து வங்கியிருப்பார்.
நேர்மறை கதாபாத்திரங்கள்
2008 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, மீனா என பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் குசேலன். இந்த படத்தில் ரஜினியின் பால்ய கால நண்பர் பாலகிருஷ்ணனாக நடித்திருப்பார். ஒட்டு மொத்த கதையும் பசுபதியை சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கும்.
2012 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் மிருகம் ஆதி நடித்து வெளி வந்த அரவான் திரைப்படத்தில் ஆதிக்கு இணையான கொம்பூதி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பாவனா நடித்து வெளிவந்த திரைப்படம் வெயில். இந்த படத்தில் பரத்தின் அண்ணனாக முருகேசன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார்.
2005 ஆம் ஆண்டு இயக்குனர் சஃபி இயக்கத்தில் விக்ரம், அசின், மணிவண்ணன் என பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் மஜா. இந்த திரைப்படத்தில் விக்ரமின் சகோதரனாக ஆதி கதாபாத்திரத்தில் வெகுளித்தனமான நடிப்பைக் கொடுத்திருப்பார்.
2009 ஆம் ஆண்டு கோவிந்தமூர்த்தி இயக்கத்தில் கதைநாயகனாக பசுபதி, ஜோதிர்மயி, வடிவேல் மற்றும் பலர் நடித்த திரைப்படம் வெடிகுண்டு முருகேசன். இந்த படத்தில் முருகேசன் கதாபாத்திரத்தில் தண்ணீர் சப்ளை செய்பவராக நடித்திருப்பார்.
2005 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், மனிஷா கொய்ராலா என பலர் நடித்த இத்திரைப்படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் என பலர் நடித்த அசுரன் திரைப்படத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷின் மனதிற்கு உகந்த மச்சானாக நடித்திருப்பார்.
2013 ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, அஸ்வின், ஸ்வாதி என பலர் நடித்து வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் காமெடியில் வெளுத்து வங்கியிருப்பார்.
2017 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளி வந்த கருப்பன் திரைப்படத்தில் தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாகவும், நல்ல மச்சானாகவும் மாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2008 ஆம் ஆண்டு கே பி ஜெகன் இயக்கத்தில் சேரன், விமலா ராமன், நவ்யா நாயர், நிதின் சத்யா, மணிவண்ணன், விதார்த், கருணாஸ், அப்புக்குட்டி என பலர் நடித்து வெளிவந்த ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் ரேடியோவில் பணிபுரியும் பார்வையற்ற நெடுமாறன் கதாபாத்திரத்தில் அசத்தல் நடிப்பை கொடுத்திருப்பார்.
0 Comments