🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* ‘தளபதி 65’ அப்டேட்
* அடங்காதே படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்
* ‘லாபம்’ பட அப்டேட்
* நடிகை அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு
* வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் மேனன்
* ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி
‘தளபதி 65’ அப்டேட்
* நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது.
அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால், அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி, 2 வாரத்தில் ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. இதையடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று சென்னை திரும்பினார்கள்.
தளபதி 65 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க உள்ளது.
அடங்காதே படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்
* ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சர்ச்சை காட்சிகளை வெட்டி நீக்கி விட்டு, யூ-ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
‘லாபம்’ பட அப்டேட்
* விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா என்ற முதல் சிங்கில் பாடலும் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.
இதையடுத்து யாமிலி யாமிலியா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடல் வெளியான 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகை அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு
* சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர்.
தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
“பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் மேனன்
* வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் "விடுதலை" என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் "விடுதலை" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி
* விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கார்த்தி பிசியானதால், இப்படம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், இன்று திடீரென இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு நடிகர் கார்த்தி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி இப்படத்திற்கு "சர்தார்" என பெயரிடப்பட்டுள்ளது.
0 Comments