'த்ரிஷ்யம் 2' முதல் பாகத்தை ஓவர்டேக் செய்கிறதா?
2013 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோர் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.
தன் மகள் அவளின் மானம் காக்க தெரியாமல் செய்து விட்ட கொலையை ஜார்ஜ் குட்டி தன் குடும்பத்துடன் சேர்ந்து எப்படி மறைக்கிறான் என்பதுதான் 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் பாகமாக இருந்தது. கதைப்படி, ஆறு வருடங்களுக்குப் பிறகு தொடங்கும் இந்த இரண்டாம் பாகம், ஜார்ஜ் குட்டி செய்த அந்த 'பர்ஃபெக்ட் கிரைம்'ல் இருக்கும் ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் அந்தக் குடும்பத்தைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க நினைக்கிறது.
ஆனால், பிசகில்லாமல் ஜார்ஜ் குட்டி கட்டம் கட்டிய திட்டம் சொதப்ப வாய்ப்புகள் ஏதேனும் உண்டா? அப்படியே அது ஒரு காலம் நடந்தால் அந்தப் பிரச்னையை சந்திக்க ஜார்ஜ் குட்டி தயாராக இருக்கிறானா? யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள், ஜார்ஜ் குட்டியாக மோகன்லாலின் அலட்டிக்கொள்ளாத நடிப்பு, கதையின் மாந்தர்கள், பார்க்கும் ரசிகர்கள் என எல்லோரையும் தாண்டி பல படிகள் முன்னே யோசிக்கும் அந்தப் பாத்திரத்தின் சமயோசிதம்... எல்லாம் சேர்ந்து மற்றுமொரு தரமான சம்பவத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட வருணின் சடலம் எங்கே புதைக்கப்பட்டது என்ற மில்லியன் டாலர் கேள்வியைக் கையில் வைத்துக்கொண்டு பாடாய்படுகிறது காவல்துறை. ஓர் எதிர்பார்க்காத சாட்சியின் உதவியுடன் அந்த இடத்தை கண்டறியும் காவல்துறை ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் குற்றத்தை நிரூபிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் 'த்ரிஷ்யம் 2'-வின் ஒன்லைன்.
திரைக்கதை வடிவமாகப் பார்த்தால் பல இடங்களில் முதல் பாகத்தின் சாயலே எட்டிப் பார்க்கிறது. அங்கே முதல் பாதியில் தேவையில்லாத டீடெய்லிங் என நாம் நினைத்த காட்சிகள் இரண்டாம் பாதியில் நிகழும் அடுத்தடுத்த ட்விஸ்டுகளுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கும். இதிலும் அப்படியானதொரு டீடெய்லிங்குடன் படம் நகர்கிறது.
ஆட்டம் சூடுபிடிக்க, திரைக்கதையில் முதல் ட்விஸ்ட் எட்டிப் பார்க்க நாம் ஒரு மணிநேரம்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு அதை நூலாகப் பிடித்துக்கொண்டு, அந்த நூலைத் திரியாக மாற்றி, ஆயிரம் வாலா பட்டாசாக இடைவிடாது க்ளைமாக்ஸ் வரை கொண்டுபோய் வெடிக்கிறது திரைக்கதை. குறிப்பாக அந்தக் கடைசி 30 நிமிடங்கள் யூகிக்க முடியாத ஒரு பரபர மேஜிக் ஷோ!
குடும்ப நண்பர்களாக, அக்கம் பக்கத்து மனிதர்களாக போலீஸ் மாறுவேடத்தில் சுற்றுவது கொஞ்சம் ஓவர் தான் ஆனாலும் கதைக்கு அது சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அந்த இடைவேளை ட்விஸ்ட் செம.
ஜார்ஜ் குட்டியாக மோகன்லால் வசீகரிக்கிறார். கண்களில் நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு இறுமாப்பு, சோகம், பயம், சென்டிமென்ட் என விதவிதமான உணர்வுகளை அநாயசமாக படம்போட்டுக் காட்டுகிறார். மாஸ் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்த மோகன்லாலுக்குத் துப்பாக்கியோ, பத்து பேரைப் பறக்கவிடும் சண்டைக் காட்சிகளோ அவசியமானதாக இருக்கவில்லை. எதையும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தும் அவரின் தேர்ந்த நடிப்பும், அதை மட்டுமே டிமாண்ட் செய்யும் திரைக்கதை அமைப்பும் அந்தப் பணியை அட்டகாசமாகச் செய்திருக்கின்றன.
தன்னை சுற்றி நடப்பதை அறிந்து பயம்கொள்ளும் மனைவி ராணி பாத்திரத்தில் மீண்டும் மீனா கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார். குற்ற உணர்வு அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்துடன் சுற்றும் மூத்த மகள் அஞ்சுவாக அன்சிபா ஹாசன். முதல் பாகத்தில் ஸ்கோர் செய்த கடைக்குட்டி மகளாக உலாவந்த எஸ்தர் அனிலுக்கு இதில் சற்றே முதிர்ச்சியான பாத்திரம். சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மோகன்லால், தான் கட்டும் தியேட்டரில் மம்முட்டி படம் திரையிட ஆசைப்படுவது போன்ற காட்சி அமைப்பு தமிழ் சினிமா நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.தன் போட்டி நடிகராக இருந்தாலும் ஒரு நட்பு கலந்த போட்டி பாராட்டுக்குரியது.
அனில் ஜான்சனின் இசை ஒவ்வொரு ட்விஸ்ட்டுக்கும் அதிர்ந்து ஒலித்து பல்ஸை எகிறச் செய்கிறது.
ஆங்காங்கே குறைகளும் எட்டிப் பார்க்காமல் இல்லை. நாயகன் போடும் திட்டங்களும் செயல்களும் பல இடங்களில் அது தொடர்பான புறக்காரணிகளை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன. அதாவது போட்ட திட்டங்கள் நிறைவேறப் பல இடங்களில் அதிர்ஷ்டமே காரணி என்பதைத் திரைக்கதை சுற்றி வளைத்துக் காட்டியிருக்கிறது. அதில் அவ்வளவு ஓட்டைகள்! கதையில் நுழைய நேரம் எடுத்துக்கொள்ளும் முதல் பாதி சற்றே பொறுமையை சோதிக்கலாம்!
அதேபோல், ஒரு விவாதத்துக்கு நியாயம் அநியாயம் எனத் தராசு கொண்டு ஆராய்ந்தால் தவறே என ஒப்புக்கொள்ள வேண்டியதொரு குற்றத்திலிருந்து தப்பிக்க நாயகன் முற்பட, அதையே நம்மையும் விரும்ப வைத்திருக்கிறார்கள் என்பது நெருடல். அதே நேரம், ஒரு சில சமயங்களில் ஒருவன் செய்த குற்றத்துக்கு ஏற்ற தண்டனையை வழங்காமல் இருப்பதும், அதன் மூலம் அந்த தண்டனை அவனுக்குத் தரும் மனநிம்மதியைத் தராமல் இருப்பதும் ஒரு கொடிய தண்டனையே என தர்க்க ரீதியாக ஒரு வாதத்தை முன் வைத்திருப்பது புத்திசாலித்தனம்.
த்ரிஷ்யம் 2 - தரமான செய்கை!!!
0 Comments